
சர்வம் சக்திக்குள் அடக்கம்
- 6th Mar 2022
-
Dinamalar
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் பிராசஸர் - கணினி செயலாக்கி ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் பெயர் 'சக்தி!' இது கணினி உலகையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது என்ற வகையில் இது இந்திய அளவிலான சாதனை மட்டுமல்ல, உலகளாவிய சாதனை. 'சக்தி' பற்றி தெரிந்து கொள்ள, அதை உருவாக்க முக்கிய காரணியானவரை சந்தித்தோம்.
'நீங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா?' என, முகத்தில் ஆர்வம் பொங்க கேட்டவர், சென்னை ஐ.ஐ.டி.,யின் புதிய இயக்குனராக பதவியேற்றுள்ள வீ.காமகோடி. ஆர்வம் என்ற சொல்லுக்கு மனித வடிவம் அளித்தால், அது இவரைப்போல தான் இருக்கும். ஐ.ஐ.டி.,யின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவராக இருந்து, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள எழுத்தாளர் சுஜாதாவை போல் 'நெடுநெடு'வென உயர்ந்த மனிதரை பார்த்து, நாம் தலையாட்டியதும், '1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19... அடுத்த நம்பர் என்ன?' என்றார்.
'21!''தப்பு. சரியான பதிலை, இந்தப் பேட்டி கடைசில சொல்றேன். நீங்க கேள்வி கேளுங்க' என்று சொல்லி, நாம் கேட்க வந்த கேள்விகளை மறக்கடித்தார்.
* பல சர்வதேச கம்பெனிகள் 'பிராசஸர்' உருவாக்குகின்றனரே... நீங்கள் ஏன் புதிய பிராசஸர் உருவாக்க வேண்டும்?
நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், மொபைல் போன், ஸ்மார்ட்வாட்ச் என, எந்த மின்னணு கருவியை எடுத்துக்கொண்டாலும், அதில் வெளிநாட்டு கம்பெனி தயாரிக்கும் பிராசஸர் தான் இருக்கிறது. அந்த பிராசஸர், அந்த கருவியை, நமக்கு பயன் தரும் விதத்தில் தான் இயக்குகிறதா அல்லது நம்மை பற்றி தகவல் சேகரிக்கிறதா என்று நமக்கு தெரியாது. அதே போல, வேறு யாராவது, வேறு எங்கிருந்தாவது அதை இயக்க முடியுமா என்றும் நமக்கு தெரியாது. வெளிநாட்டில் இருந்து வரும் பிராசஸர்கள் எல்லாம் 'பிளாக் பாக்ஸ்!' அதாவது அதற்குள்ளே என்ன இருக்கிறது, அது என்ன செய்கிறது என்றே நமக்கு தெரியாது.கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீங்கள் உங்கள் மொபைல் போன் வாயிலாக, மற்றவருக்கு பணம் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இரண்டு காசு வீதம் 1.50 கோடி பேருக்கு எடுத்துக் கொண்டாலே போதுமே! ராணுவ ரகசியம் மட்டுமல்ல, நம்மைப் போன்ற சாதாரணவர்களுடைய தரவுகளுமே ரகசியமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட பயங்கரமான விஷயங்களை கூட விட்டு விடுவோம்; வெளிநாட்டு பிராசஸரை இயக்கக்கூடிய மூல மென்பொருள் கூட அதை தயாரிக்கும் கம்பெனியால் மட்டும் தான் உருவாக்க முடியும். ஏனெனில், வெளிநாட்டு பிராசஸரின்
வடிவமைப்பு, இயக்கம் எல்லாம் மூடுமந்திரம்; காப்புரிமையால் பாதுகாக்கப்பட்டது.
* இதனால் என்ன?
இந்தியாவில் ஒரு வங்கி, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் ஏ.டி.எம்., இயந்திரங்களை வாங்கி நிறுவி இருந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின், அதன் மூல மென்பொருளை மாற்ற உள்ளதாகவும், அதனால் அந்த பிராசஸரையும் மாற்ற வேண்டும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது. மாற்றாவிட்டால், அந்த நிறுவனம், ஏ.டி.எம்.,களில் வரும் பிரச்னைகளுக்கு பொறுப்பேற்காது!ஒவ்வொரு ஏ.டி.எம்.,முக்கும் லட்சக்கணக்கான ரூபாய் வீதம் செலவிட வேண்டும். அந்த வங்கியிடம் ஆயிரக்கணக்கான ஏ.டி.எம்., இருந்தது. நீங்கள் நஷ்டத்தை கணக்கிட்டு பாருங்கள். என் தாத்தா, 'கங்கையோட ஆழம், 108 அடின்னு யாராவது சொன்னா, நம்பாதே. நீ ஒரு கல்ல கயத்துல கட்டி 'விறுவிறு'ன்னு உள்ளவிட்டு, அளந்து பாரு'ன்னு சொல்வார். அதைத் தான் நாம் செய்ய வேண்டும்.இதனால் தான் நமக்கென்று பிராசஸர் தேவை. அதுவும் காப்புரிமைக்கு உட்படுத்தப்படாத பிராசஸர். அது தான் 'சக்தி'பிராசஸரை உருவாக்க காரணம்.
* 'சக்தி'யின் சிறப்பு அம்சம் என்ன? பெரிய பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பிராசஸர்கள் செய்ய முடியாததை 'சக்தி'யால் செய்துவிட முடியுமா?
நான், முன்பே சொன்னது போல் அனைத்து மின்னணு கருவியிலும் பிராசஸர் இருக்கிறது. ஆனால், கம்ப்யூட்டரில் உள்ள அதே பிராசஸரா மொபைல் போனிலும் இருக்கிறது? இல்லை. ஒவ்வொரு விதமான மின்னணு கருவிக்கும் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பிராசஸர் தேவை; ஏன்? கம்ப்யூட்டர் பிராசஸரை கொண்டு மொபைல் போனில் போட்டால், சில நிமிடங்களிலேயே, 'பேட்டரி'யை காலி செய்துவிடும். மேலும், மொபைல் போன் சிக்னலை உள்வாங்கி அதை ஒலியாக மாற்ற, சிறப்பு அம்சங்கள் தேவை. இப்படி, பயன்பாட்டிற்கு ஏற்ப, ஒவ்வொரு கருவிக்கும், ஒவ்வொரு தேவை இருக்கிறது. ஆக, ஒரே பிராசஸரால் அனைத்து வேலையும் செய்ய முடியாது. ஒவ்வொரு வகையான பிராசஸரையும் உருவாக்க, மேம்படுத்த என, கோடிக்கணக்கான பணம் செலவாகும். 'சக்தி'யில் இந்த பிரச்னையே கிடையாது. ஒரே பிராசஸர் தான். தேவைக்கு ஏற்ப பெரிய செலவில்லாமல் மாற்றிக்கொள்ளலாம்.
*அது எப்படி சாத்தியம்?
'சக்தி'யில் சாத்தியம். ஏனென்றால் இதை, 'மாட்யுலர்' ஆக வடிவமைத்து உள்ளோம்.
*'மாட்யுலர்' என்றால் எப்படி?
குழந்தைகள் வைத்து விளையாடும் 'ப்ளாக்ஸ்' பற்றி யோசித்து பாருங்கள். பல்வேறு நிறங்களில், வடிவங்களில் இருக்கும். ஆனால், ஒன்றோடு ஒன்று பிசிறில்லாமல் சேர்க்கும்படியாக இருக்கும். அவற்றை வைத்து, நம் கற்பனை போல கட்டடங்கள் கட்டிக் கொள்ளலாம். அப்படித் தான் 'சக்தி'யை வடிவமைத்து உள்ளோம். 'சக்தி'யை உருவாக்கலாம் என்று யோசிக்க துவங்கிய போதே இது பற்றி தெளிவாக இருந்தோம். உதாரணமாக, மொபைல்போனுக்கு தயாரிக்கப்படும் பிராசஸரை எவ்வளவு விரைவாக, இன்னொரு ஆடியோ கருவிக்கு மாற்ற முடியும்? அதில் இருந்து சில அம்சங்களை நீக்க வேண்டும், ஒருசிலவற்றைச் சேர்க்க வேண்டும்.
அதற்கேற்ப மென்பொருள் எழுத வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? எவ்வளவு விரைவாக செய்யலாம்? ஒரு புதிய கருவிக்கு தேவையான பிராசஸரை உற்பத்தி செய்து, இதர பாகங்களோடு இணைத்து, சோதனை செய்து பார்த்த பின், சந்தைக்கு கொண்டுவருவதற்கு இருக்கும் காலமோ வெகு குறைவு. ஏழு அல்லது எட்டு மாதங்களுக்குள் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். எப்படி செய்ய முடியும்? இது தான் பிரதானமான கேள்வி.அந்த காலத்து பிராசஸர்கள், இதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை; அவையெல்லாம் 'திருப்பணி' மாதிரி. ஒரு கட்டம் வரைக்கும் கட்டடம் எழுப்புவோம். கும்பாபிஷேகத்துக்கு இன்னும் கொஞ்சம் நாள் இருக்கிறது என்றால், இன்னும் கொஞ்சம் வேலைகளை செய்வோம். பெரிய பெரிய கோவில்களில் எல்லாம், எல்லா வேலைகளும் முடிந்த பின் கும்பாபிஷேகம் நடக்காது. கொஞ்சம் பணம் வருகிறதா, இன்னும் நான்கு பேரை அழைத்து, இன்னும் நான்கு இடங்களை எழுப்புவர். அது மாதிரி தான், பிராசஸர்களை உருவாக்கினர்.
* நீங்கள் சொல்வதை பார்த்தால், இனி புதிய பிராசஸர்களை உருவாக்கவே தேவையில்லை போல் தெரிகிறதே…
ஆமாம், இனி புதிய பிராசஸர்கள் தேவையே இல்லை! மிகச்சிறிய கருவி முதல் சூப்பர் கம்ப்யூட்டர் வரை 'சக்தி' பிராசஸரே போதும்
* ஓ! இது பிரமாண்டமான உலக சாதனை ஆயிற்றே. பல ஆயிரம் கோடி செலவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் புதிய பிராசஸர் உருவாக்கும் நிறுவனங்களின் கதி என்ன?.
அனைவரும் இதை நோக்கி தான் வர வேண்டும். 'ஆர்.ஐ.எஸ்.ஸீ., 5' என்ற வடிவமைப்பில் தான் 'சக்தி' உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த
வடிவமைப்பில் உள்ள பொதுவான அம்சங்களை நிர்ணயிக்க, அமெரிக்காவின் யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா பெர்க்லி, எம்.ஐ.டி., இன்னும் சில பல்கலைக் கழகங்களோடு சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினோம். இதில் இப்போது 1,500 நிறுவனங்கள் உறுப்பினராக இணைந்து உள்ளன.இன்னும் நான்கு ஆண்டுகளில், உலகமெங்கும் 'ஆர்.ஐ.எஸ்.ஸீ., 5' தான் கோலோச்சப் போகிறது. அப்போது எல்லாரும் 'சக்தி'யை பயன்படுத்துவர்.
* பிராசஸர் உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பல பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள். 'சக்தி' பின்னால் உள்ள கதை என்ன?
அப்துல்கலாம் 'விஷன் 2020' என்பதை அறிவித்தார். அதில் அவர், 'நான் வித்தியாசமான இந்தியாவைப் பார்க்க விரும்புகிறேன். அதில் அருவமான கருத்துகள் வேண்டாம்; மாறாக, அவை நம் நாட்டுக்கு உயிர்நாடியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் இந்தியாவுக்கு உயிர்நாடியான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும்' என்று சொன்னார்.கலாம் எனக்கு மிகப்பெரிய ஆதர்சம். அவர் 'மேட் இன் இந்தியா!' நானும் 'மேட் இன் இந்தியா!' அவர் மாதிரி ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அதனால், அவர் சொன்னதை வேதவாக்காக
எடுத்துக் கொண்டேன். நாம் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். சரி, பிராசஸர் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தேன்.
கடந்த 2012ல் இதில் முழுவீச்சில் இறங்கினேன். முதலில், 2012 வரை உள்ள அனைத்து பிராசஸர்களையும் எடுத்து ஆய்வு செய்தோம். அவையெல்லாம் இனி வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்தோம். எங்கிருந்து துவங்கலாம் என்று தேடும்போது, ஐ.பி.எம்., நிறுவனத்தின் 'பவர் பிசி' பிராசஸர் தென்பட்டது. அது ஆர்.ஐ.எஸ்.ஸீ., என்ற வெளிப்படையான வடிவமைப்பு கொண்டது. அதனால், அதன் அடிப்படையில் நாம் ஒரு திட்டத்தை ஆரம்பிப்போம் என்ற முடிவுக்கு வந்தோம்.'பவர்' என்றால் 'சக்தி!' தமிழிலும், சமஸ்கிருதத்திலும் சக்தி என்றால் சக்தி தான். அதனால் 'சக்தி பிராசஸர்' என்று ஆரம்பித்தோம். ஆனால், வடிவமைப்பு விபரங்களை பெற, அந்த நிறுவனத்துக்கு, 20 ஆயிரம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அப்போது எங்களுக்கு அவ்வளவு நிதி உதவி கிடையாது.
மேலும், அதை கற்றுக் கொண்டு பயன்படுத்தவே, 2020 ஆகிவிடும் போல் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தபடி நின்றோம்.'எண்ணங்கள் நன்றாக இருந்தால், கடவுள் நமக்கு அனுக்கிரகம் செய்வார்' என்று சொல்வர். அப்போது தான், நான் முன்பு குறிப்பிட்ட பெர்க்லி பல்கலையில் இருந்து ஒருவர் வந்தார். அவர்களும், எம்.ஐ.டி., பல்கலையும் இணைந்து, எங்களை போலவே புதிய பிராசஸர் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது.வந்தவர், 'நாங்கள் 'ஆர்.ஐ.எஸ்.ஸீ.,
5' என்ற புது 'கான்செப்ட்' ஆரம்பித்துஉள்ளோம். நீங்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது மிகவும் எளிதானது. அதை வைத்துக் கொண்டு நானே மூன்று நாட்களில், குட்டியாக ஒரு பிராசஸரை செய்துவிட்டேன்.
நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே?' என்றார். நாங்கள் ஒரு நான்கைந்து பேர் குழுவாக இருந்தோம். ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து விடியற்காலை இரண்டு, மூன்று மணி வரை விவாதித்து, எங்களுடைய பிராசஸர் திட்டத்தை, 'ஆர்.ஐ.எஸ்.ஸீ., 5'க்கு மாற்ற முடிவு செய்தோம். இதில் நாங்கள் கருத்தில் கொண்டது மூன்று விஷயங்கள்:
1 புதிய பிராசஸர் அனைத்து பயன்பாடுகளுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.அதாவது, முன்பு சொன்னது போல 'மாட்யுலர்' ஆக இருக்க வேண்டும்.
2 யார் வேண்டுமானாலும் அவர்கள் தேவைக்கு ஏற்ப அதில் மாற்றம் செய்து கொள்ளுமாறு வெளிப்படையாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படை தன்மையில் இன்னொரு லாபம் பாதுகாப்பு. பலரின் பார்வையும் அதில் படுவதால், பிரச்னைகளை உடனுக்குடன் கண்டுபிடிக்க முடியும்.
3 மிக முக்கியமாக, வெளிநாட்டு உள்கட்டமைப்பு, பாகங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ஏனெனில், திடீரென்று ஒரு நாள், வெளிநாட்டு நிறுவனம், காலை வாரி விடலாம். இனிமேல் இந்த வசதிகளை வழங்க முடியாது என்று சொல்லிவிடலாம் அல்லது அதன் பாகங்களுக்கான கட்டணத்தை உயர்த்தி விடலாம். இவற்றை அடிப்படையாக கொண்டு, வேலையை துவங்கினோம்; படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. பெரிய பண வசதி இல்லாததால், 2015 முதல் இதை ஒரு மாணவர் திட்டமாக நடத்தினேன். ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஊழியர்களும் ராஜினாமா செய்துவிட்டு, முற்றிலும் புதிய ஊழியர்கள் சேரும் ஒரு நிறுவனத்தை யோசித்து பாருங்கள். அது தான் மாணவர் திட்டம். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக மாணவர்கள் வருவர். இதை எடுத்துச் செய்வர். பின், போய்விடுவர். ஒரு சில மாணவர்கள் என்னுடனேயே இருந்தனர்.
மதுசூதன், சங்கர்ராமன், வாசன், நீல்கலா, அர்ஜுன் மேனன் போன்றவர்கள் என்னை விட்டு போகவில்லை. தேசப்பற்று தான் காரணம். வெளியே அவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்தது. ஆனால், 'உங்கள் பிராஜக்ட் பிடித்திருக்கிறது' என்று சொல்லி என்னிடமே வேலை பார்த்தனர். நானும் தட்சணை மாதிரி ஏதோ, 10 ஆயிரம்,
20 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன். அப்போதெல்லாம் நான் நிறைய மீட்டிங்குக்கு போயிருக்கிறேன். போனால், 'ஹே... ஹே...' என்று சிரித்துவிட்டு, 'நீயா... நீ என்ன பிராசஸர் பண்றிz?' என்று கேலியாக கேட்பர்; நிறைய அவமானம் வந்தது. நான் பதில் சொல்லாமல் திரும்பி விடுவேன். 'நாம் நாட்டுக்காக இதை செய்கிறோம். ஒரு நாள் சரியாக வரும்' என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. முடிந்தவரை இழுத்துப் பிடித்து, இந்த திட்டத்தை செயல்படுத்தி வந்தேன்.
'லோகோ பூஜித பூஜிதஹ!' என்பது சமஸ்கிருதத்தில் இருக்கும் முதல் தரமான வாக்கியம். அதாவது, நாலைந்து பேர், நம்மைப் பார்த்து நீங்கள் பெரிய ஆள் என்று சொன்னால், மற்றவர்களும் அப்படியே சொல்வர். ஆனால், அந்த முதல் நாலைந்து பேர் சொல்வது தான் கஷ்டம். அந்த முதல் நாலைந்து பேராக, 2017ல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், இந்த திட்டத்தை அங்கீகரித்தது; 11 கோடி ரூபாய் ஆதரவு நிதியாக கொடுத்தது. அதன்பின் மூன்றே மாதங்களில் இரண்டு 'பிராசஸர் சிப்'க்கான அச்சை தயார் செய்தோம். பிள்ளையார் சிலை செய்ய அச்சு இருக்கும் இல்லையா, அது போன்றது இது. அதில் களிமண் போட்டு பிள்ளையார் பிடிப்போம், இங்கே 'சிலிக்கான்' கொட்டி 'சிப்' உருவாக்குவோம். இதில் அச்சு தயார் செய்வது தான் மிகவும் சிரமம்.
அப்போது எல்லாமே புதுசு. இந்தியாவில் இதுபோன்று யாருமே சிப் தயார் செய்ததில்லை. என்னிடம் வேலை செய்த மாணவர்களுக்கும் புதுசு; எனக்கும் புதுசு. பின், நான்கு மாதங்களில் இரண்டு 'சிப்' மாதிரிகளை தயார் செய்து, சோதனைக்கு அனுப்பிவிட்டு, வெங்கடாசலபதியை வேண்டிக் கொண்டு காத்திருந்தேன்.அவர் கைவிடவில்லை. முதல் முயற்சியிலேயே இரண்டு 'சிப்'பும் வெற்றிகரமாக கைகூடியது. உண்மையில் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், மிகப்பெரிய வெற்றி. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக வேலை செய்தது; பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. எங்கள் உடல்மொழியே மாறிவிட்டது.
* நம் நாட்டில் நிகழ்ந்த சாதனையை பற்றி கேட்கும்போது புல்லரிக்கிறது. இன்னும் 1,000 கோடிகள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பணம் செலவிடப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. இருந்தாலும், முதலில் கேட்ட கேள்விக்குப் பதில் என்ன என்பதும் மண்டையை குடைகிறது....
ஹா ஹா ஹா... 31!
எப்படி? ஒண்ணும் புரியலையே...!
1, 3, 5, 7,9, 11, 13,17, 19 எல்லாம் ஒற்றைப் படை எண்களால் உருவானவை. 20 முதல் 29 வரை இரண்டு என்ற இரட்டைப்படை எண் வருகிறது. 30ல் பூஜ்ஜியம் வருகிறது. இந்த வரிசையில் அடுத்த ஒற்றைப்படை எண்களால் ஆன எண் 31; சரி தானே?மாற்றி யோசிப்பது என்பது இது தான். இப்படி மாற்றி யோசித்ததால் தான், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கப் போகிறது.
பிராசஸர் என்றால் என்ன?
கணினி, அலைபேசி,கேமரா, ஸ்மார்ட் வாட்ச் என்று எந்த மின்னணு கருவியை எடுத்துக் கொண்டாலும் அதில் மென்பொருள் - சாப்ட்வேர், வன்பொருள் - ஹார்ட்வேர் என இரண்டும் இருக்கும். ஒரு 'ஆண்ட்ராய்டு' அலைபேசியை இயக்கும் மென்பொருள் தான் 'ஆண்ட்ராய்டு!' அது 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிக் டாக்' உட்பட பல்வேறு 'ஆப்' மென்பொருட்கள் இயங்குவதற்கான இயங்கு தளமாக செயல்படுகிறது.இவற்றை எல்லாம் இயக்குவது தான் வன்பொருளான செயலாக்கி. செயலிகளை செயலாக்குகிறது. செயலாக்கி என்பது தான் ஆங்கிலத்தில் பிராசஸர் எனப்படுகிறது.செயலாக்கியை மின்னணு சாதனத்தின் மூளையாக பாவித்துக் கொள்ளலாம்.
டாக்டர் வீ.காமகோடி , இயக்குனர், சென்னை ஐ.ஐ.டி.